விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,310 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,310 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர்.பூர்ணிமா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நீதிபதிகள் விஜயகுமார், முத்துக்குமாரவேல், சுந்தரபாண்டியன், தேன்மொழி, சந்திரன், கோபிநாதன், செங்கமலச்செல்வன், சாந்தி, அருண்குமார், எஸ்.பூர்ணிமா, ஆயுஷ்பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1,310 வழக்குகளுக்கு தீர்வு
இம்முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 2,875 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 1,400 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகபூபதி, வக்கீல்கள் தமிழ்செல்வன், கண்ணப்பன், முகில்வண்ணன், செந்தில்குமார், பன்னீர்செல்வம், வேலவன், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் சரோஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 1,197 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.13 கோடியே 57 லட்சத்து 83 ஆயிரத்து 88-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 113 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 4 லட்சத்து 87 ஆயிரத்து 400-க்கு தீர்வு காணப்பட்டது. ஆக மொத்தம் 4,275 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 1,310 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.14 கோடியே 62 லட்சத்து 70 ஆயிரத்து 488-க்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story