குமரியை தொடர்ந்து திட்டக்குடியிலும் சம்பவம்: அரசு பஸ்சில் ஏறிய பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டதால் பரபரப்பு டிரைவர், கண்டக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்


குமரியை தொடர்ந்து திட்டக்குடியிலும் சம்பவம்: அரசு பஸ்சில் ஏறிய பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டதால் பரபரப்பு டிரைவர், கண்டக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 11 Dec 2021 10:23 PM IST (Updated: 11 Dec 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் நடந்த சம்பவத்தை போன்று, திட்டக்குடியிலும் அரசு பஸ்சில் ஏறிய பள்ளி மாணவர்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ளது புலிவலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திட்டக்குடியில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி மற்றும் கீரனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

கிராமத்து மாணவர்கள் அரசு பஸ்சில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை மாணவ, மாணவிகள் புலிவலம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது காலை 8.20 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்த அரசு பஸ், அங்கு நிற்காமல் சென்றது. இதனால் திட்டக்குடி பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அந்த பஸ்சில் ஏற முடியாமல் போனது. எனவே அவர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். 

கீழே இறக்கி விட்டனர்

சிறிது நேரத்தில் அந்த பஸ் திட்டக்குடியில் இருந்து சின்னசேலம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது. புலிவலம் கிராமத்துக்கு வந்து பயணிகளை ஏற்றியபோது, கீரனூர் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதில் ஏறி உள்ளனர். 

அப்போது பஸ்சில் இருந்த கண்டக்டர், இந்த பஸ்சில் பஸ் பாஸ் பயன்படுத்தி பயணிக்க                   இயலாது என்று கூறி பஸ்சில் ஏறிய மாணவர்களை ஏறவிடாமல் கீழே இறக்கி விட்டுள்ளார்.

அப்போது மாணவர்கள் இந்த பஸ்சில் சென்றால் தான் தங்களால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதனை கண்டக்டர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

சாலை மறியல்

இதனால் வெகுண்டெழுந்த மாணவ, மாணவிகள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் கிராமத்து மக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் திட்டக்குடி போக்குவரத்து பணிமனை மேலாளர் குமரகுருபரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் எங்களால் இந்த பஸ்சில் சென்றால் தான் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியும். ஆனால் டிரைவர், கண்டக்டர் எங்களை பஸ்சில் ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து பணிமனை மேலாளர் குமரகுருபரன் கூறுகையில், இதே நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு, பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

குமரியை போன்று சம்பவம்

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ்சில் ஏறிய மீன் விற்கும் பெண் மற்றும் நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்களை இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

அதேபோன்று, திட்டக்குடி பகுதியிலும் அரசு பஸ்சில் ஏறிய மாணவ, மாணவிகளை இறக்கி விட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 


Next Story