மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விளக்கம்
மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து பரமத்தி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் விளக்கமளித்துள்ளார்.
பரமத்திவேலூர்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆப்பிரிக்க மாவுப்பூச்சி
பரமத்தி வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு ஆண்டு தோறும் ஆயிரத்து 900 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கில் ஆப்பிரிக்க வகையை சேர்ந்த புதிய வகை மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டது.
இந்த புதிய வகை மாவுப்பூச்சிகளை அழிக்கக்கூடிய ஒட்டுண்ணிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அதனை இனப்பெருக்கம் செய்து தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் விவசாயிகளுக்கு வழங்க பெங்களூரு தேசிய பூச்சிகள் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கட்டுப்படுத்துவது எப்படி?
மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த, தாக்குதலுக்கு உள்ளான செடிகளில் இருந்து விதை கரணைகளை தேர்வு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நல்ல தரமான செடிகளில் இருந்து விதை கரணைகளை தேர்வு செய்வதால் பாதிப்பு குறையும். மேலும் நடவு செய்வதற்கு முன்பு குளோரிபைரிபாஸ் அல்லது புரோப்பனோபாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தினை 2 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 முதல் 20 நிமிடம் விதை கரணைகளை அதில் மூழ்கவைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
மாவுப்பூச்சியின் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது ஆசார்டிரக்டின் மருந்தினை 1 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி என்ற அளவு கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story