தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
செடிகள் அகற்றப்படுமா?
தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைவிளையில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை சந்தைவிளையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவு முக்கியத்துவமாக விளங்கும் சுகாதார நிலையத்தின் வளாகத்தில் செடிகள், புல், பூண்டுகள் வளர்ந்து உள்ளது. இது விஷ பூச்சிகள் வசிப்பிடமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாஞ்சில் விஷ்ணு சந்தைவிளை.
காத்திருக்கும் ஆபத்து
ஆளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நடு ஆசாரிபள்ளம் புதுத்தெருவின் முகப்பு பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுவிட்ச் பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் பீஸ் மற்றும் வயர் தனித்தனியாக தொங்குகிறது. அதை தொட்டால் விபத்து நேரிடும் நிலை உள்ளது. இந்த பகுதி சிறுவர் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, சேதமடைந்த சுவிட்ச் பெட்டியை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ஆன்டணி ராஜ், ஆசாரிபள்ளம்.
மண் சரிந்ததால் சேதமடைந்த சாலை
தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து பால் குளம் க௫ம்பாறை செல்லும் சாலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்தன. இதனால் சாலை துண்டிக்கப்பட்டது. இந்த பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த சாலையை தான் நம்பி உள்ளனர். எனவே காலம் தாழ்த்தாமல் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
சீரமைக்க வேண்டிய சாலை
குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் பெருமளவு சேதம் அடைந்துள்ளது. அதே போல் நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை ஓய்ந்து வெயிலாக உள்ளது. எனவே உடனே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
வாகன ஓட்டிகள் அவதி
இடலாக்குடியில் இருந்து சுசீந்திரம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் கவனமாக செல்ல வேண்டும். இல்லாவிட்டால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் அவதியை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.எஸ்.சித்தார்த்தன், வடக்கு தாமரைகுளம்.
எரியாத தெருவிளக்கு
நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் இருந்து தட்டான்விளை, ராமன்புதூர் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்பவர்களும் வாகனங்களில் செல்வோரும் மிகுந்த கவனத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.வி.நாராயணன் வைத்தியநாதபுரம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொன்மனை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சக்கோடு 10-வது வார்டு சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களின் கீழ் பகுதியில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. மேலும் தூண்களில் ஆங்காங்கே விரிசல் விட்டு உள்ளது. எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டார்வின், ஈஞ்சக்கோடு.
Related Tags :
Next Story