தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Dec 2021 11:04 PM IST (Updated: 11 Dec 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடியே 67 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குளுக்கு  தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடியே 67 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், ராமேசுவரம் ஆகிய கோர்ட்டுகளில் 9 அமர்வுகளாக இந்த லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.
 ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை  தாங்கினார். மகளிர் கோர்ட்டு மாவட்ட நீதிபதி சுபத்ரா, கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, சப்-கோர்ட்டு நீதிபதி கதிரவன், நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்-1 நீதிபதி சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், வக்கீல்கள் சங்க செயலாளர் நம்புநாயகம், வக்கீல்கள் செல்வராஜ், மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 9 அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1,420 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 825 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. 
இழப்பீடு
இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.5 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 939 வழங்கப்பட்டது. இதன் மூலம் வழக்குகளில் தீர்வு ஏற்பட்டு முடித்து வைக்கப்பட்டது. 
ராமநாதபுரம் அருகே உள்ள மான்குண்டு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சிப்புளி பகுதியில் சென்றபோது சரக்கு வாகனம் மோதி படுகாயமடைந்து கால் ஊனமடைந்தார். இவர் ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தீர்வு
இந்த வழக்கில் ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்க இன்சூரன்சு நிறுவனம் சம்மதம் தெரிவித்து லோக் அதாலத் நிகழ்வில் தீர்வு ஏற்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் தர்மர் ஆஜரானார். இதேபோல, ராமநாதபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இசைபாடகரான இவர் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளுடன் கலந்து கொண்டுமோட்டார் சைக்கிளில் 2019-ம் ஆண்டு மதுரை நோக்கி சென்றார். அப்போது திருமங்கலம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மணிகண்டன் பலியானார். இவரின் இறப்பிற்கு இழப்பீடு கோரி அவரின் மனைவி ராஜேஸ்வரி ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் ரூ.21 லட்சம் வழங்க இன்சூரன்சு நிறுவனம் முன்வந்ததால் தீர்வு ஏற்பட்டு உடனடியாக அதற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் அஜய்குமார் ஆஜரானார். இந்த 2 வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட மனுதாரர்களிடம் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் அதற்கான உத்தரவுகளையும், காசோலையையும் வழங்கினார்.

Next Story