2 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது
2 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது
பனைக்குளம், டிச.12-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, ஆமை, பல அரிய வகையான மீன்கள் வாழ்ந்து வருகின்றன. இதைத்தவிர ஆழ்கடல் பகுதியில் திமிங்கலங்களும் உள்ளன. இந்த நிலையில் அழகன்குளம் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கிக் கிடப்பதாக வன பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனச்சரக அலுவலர் ஜெபஸ், வனவர் சடையாண்டி உள்ளிட்ட வன பாதுகாப்பு படை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடற்கரையில் அழுகிய நிலையில் கிடந்த திமிங்கலத்தை பார்வையிட்டு அதன் நீளம், அகலம், எடை உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்தனர். இறந்து கிடந்த திமிங்கலம் சுமார் 2 டன் எடை கொண்டதாகவும், 11 மீட்டர் நீளமும் இருந்தது. கால்நடை மருத்துவரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த திமிங்கலம் கடற்கரை பகுதியிலேயே எந்திரம் மூலம் பெரிய குழி தோண்டப்பட்டு பாதுகாப்பாக கடற்கரையில் புதைக்கப்பட்டது. அழகன்குளம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த பெரிய திமிங்கலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்களும் மீனவர்களும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
இதுபற்றி வன பாதுகாப்பு படையினர் கூறும்போது, அழகன்குளம் கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்த இந்த திமிங்கலம் பனைமீன் வகையைச் சார்ந்ததாகும். இது இறந்து கடலுக்குள் 20 நாட்களுக்கு மேல் கடல்நீரில் கிடந்திருக்கலாம். கடல் அலை மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் இந்த கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என தெரிகிறது. கடலில் நீந்தும்போது பெரிய கப்பலின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் வெட்டியோ அல்லது திருக்கை மீன்களின் முள் குத்தியோ காயம் ஏற்பட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் பாறைகளில் மோதி இறந்து இருக்கலாம் என்றனர்.
Related Tags :
Next Story