தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி


தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2021 11:14 PM IST (Updated: 11 Dec 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

அரசு ரப்பர் கழகத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

நாகர்கோவில், 
அரசு ரப்பர் கழகத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
மிக விரைவில் தீர்வு
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1984-ம் ஆண்டு அரசு ரப்பர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயகா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி நீலகிரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் தேயிலை தோட்ட கழகமும், குமரியில் ரப்பர் தோட்ட கழகமும் ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கழகம். அது சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகிறது.
விலை குறைவு காரணமாக அரசு ரப்பர் கழகம் சில ஆண்டுகளாக நஷ்டத்திலும், கடந்த ஆண்டு லாபம், நஷ்டம் இல்லாமல் சமமாகவும் இருந்துள்ளது. தற்போது ரப்பர் விலை சற்று அதிகரித்துள்ளது. எனவே ரப்பர் கழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த அரசு மிக விரைவில் தீர்த்து வைக்கும். இது தி.மு.க. அரசு. மக்களின் ஆட்சியாக நடத்தப்படக்கூடிய அரசு.
நல்லது நடக்கும்
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகத்தை லாபகரமாக இயக்கி, அவ்வாறு வரக்கூடிய லாபத்தை எல்லாம் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு எல்லாம் வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் லாபம் வரவேண்டும். லாபம் வருவதற்கு தொழிலாளர்கள் நன்றாக உழைக்க வேண்டும். அவ்வாறு உழைத்தால் தொழிலாளர்களுக்கு அதிக பயன்கள் கிடைக்கும். அதற்கு நான் உறுதி தருகிறேன்.
அரசு ரப்பர் கழகத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையை பொறுத்தமட்டில் வனத்துறையோ, அரசு ரப்பர் கழகமோ முடிவு செய்ய முடியாது. முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதாவது அரசு ரப்பர் கழகம், தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்க தலைவர்கள் அமர்ந்து பேசி சம்பள உயர்வை முடிவு செய்வது தான் மரபு. அவ்வாறு தான் செய்ய முடியும். அமைச்சர் என்பதால் நானாக அறிவிக்கவும் முடியாது. தற்போது தி.மு.க. ஆட்சி நடக்கிறது. நிச்சயம் நல்லது நடக்கும்.
சூழலியல் சுற்றுலாத்தலம்
யானைகள் இறப்புகளை தடுக்க மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து ஆய்வு நடத்தி வருகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். சூழலியல் சுற்றுலாத்தலம் ஏற்படுத்த எந்தெந்த இடங்களில் வாய்ப்பு இருக்கிறதோ? அங்கெல்லாம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story