மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மளிகை கடை உரிமையாளர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சசிகலா (வயது 42), திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே மளிகை கடை வைத்துள்ளார்.
இதனால் காலையில் கடை திறந்து வியாபாரம் செய்து விட்டு இரவு 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு மகள் மோனிகாவுடன் மொபட்டில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் இரவு கடையை மூடிவிட்டு மகள் மோனிகாவுடன் சசிகலா வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
பாச்சல் மேம்பாலம் வழியாக சின்ன மூக்கனூர் சர்வீஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரே பதிவெண் இல்லாத மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மோனிகாவின் மொபட் மீது வேண்டுமென்றே மோதினர்.
இதனால் மொபட்டிலிருந்து சசிகலா, மோனிகா ஆகிய இருவரும் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் சசிகலாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி சரடை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகி தப்பினர்.
நகையை பறிகொடுத்த சசிகலா மற்றும் மோனிகா ஆகிய இருவரும் கத்தி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் சசிகலா சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வலைவீச்சு
அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து 5 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இரவு நேரத்தில் பெண்கள் மொபட்டில் செல்வதை நோட்டமிட்டவர்கள் நகைபறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Related Tags :
Next Story