பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் விபத்தில் சாவு


பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் விபத்தில் சாவு
x
தினத்தந்தி 11 Dec 2021 11:27 PM IST (Updated: 12 Dec 2021 12:50 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருேக பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.

நெமிலி,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனாபுரம் புதுகண்டிகையைச் சேர்ந்தவர் ஜெகன். இவரின் மகன் தினேஷ்குமார் (வயது 18). இவர், காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை வகுப்புகள் முடிந்ததும் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு வருவதற்காக ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார். 

பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மாணவர்கள் படியில் நின்றவாறு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் தினேஷ்குமாரும் படியில் பயணம் செய்துள்ளார். 
தனியார் பஸ் பள்ளூர் பருவமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படியில் பயணம் செய்த மாணவர் தினேஷ்குமார் திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். 

உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவர் தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.  அவரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும், சக மாணவர்களும் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Next Story