பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும்


பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Dec 2021 6:04 PM GMT (Updated: 11 Dec 2021 6:04 PM GMT)

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:- 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தின் கீழ் செயல்படும் வட்டார அளவிலான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் 10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும்  இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் சட்டபிரிவின் கீழ் அலுவலக உட்புகார் குழு அமைக்க வேண்டும்.
 இந்த குழுவில் குறைந்தபட்சம் 5 நபர்கள் இருக்க வேண்டும். 5 நபர்கள் கொண்ட குழுவில் தலைவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த உட்புகார் குழு 10 பணியாளர்கள் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலகத்திலும் அமைக்கப்பட வேண்டும். 10 பணியாளர்களுக்கு குறைவாக பணிபுரியும் அலுவலகங்கள் மாவட்ட அளவிலான உள்ளூர் புகார் குழு மூலம் புகார் அளிக்கலாம்.

அபராதம்

 இந்த  குழு அமைக்க தவறினால் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். .எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அலுவலக உட்புகார் குழு அமைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை முழுமையாக ஒழித்திட வேண்டும். மேலும் பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்களுக்கு ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் உடனடியாக அலுவலக உட்புகார் குழுவிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story