சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி


சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி
x
தினத்தந்தி 11 Dec 2021 11:38 PM IST (Updated: 11 Dec 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

ஊசூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

அடுக்கம்பாறை

ஊசூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். 

சுவர் இடிந்து சிறுவன் பலி

வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த தெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 

இங்கு குடியிருக்கும் கூலி வேலை செய்யும் வினோத்குமாருக்கு (வயது 27) காயத்திரி (23) என்ற மனைவியும் புவனா (7) என்ற மகளும், யஷ்வந்த் (4) என்ற மகனும் உண்டு. 

நேற்று முன்தினம் இரவு காயத்ரி சிறுவன் யஷ்வந்த்துடன், வீடு அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வரும்போது, இவர்கள் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் மோகன் என்பவரின் வீட்டு மண் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

இதன் இடிபாடுகளில் சிக்கி தவித்த காயத்ரி மற்றும் யஷ்வந்த் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த யஷ்வந்த் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

பின்னர் அங்கிருந்து ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மாற்று இடம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரியூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் இவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா இல்லாததால் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகளும் கட்டி தரப்படவில்லை.

அனைத்து வீடுகளும் மண் சுவர் குடிசை வீடுகளாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மண்சுவர் முழுவதுமாக ஈரமாகி இருந்தது. இதனால் சுவர் இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு இலவச வீட்டுமனையுடன் மாற்று இடம் வழங்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அதன்படி நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் பல்வேறு இடங்களில் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story