மயானப்பாதை இல்லாததால் கழுத்தளவு நீரிலும், வயல் வழியாகவும் இறந்தவர் உடலை தூக்கி செல்லும் அவலம்
புதுக்கோட்டை அருகே மயானப்பாதை இல்லாததால் இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரிலும், வயல்வெளி வழியாகவும் தூக்கி செல்லும் அவலநிலை உள்ளது.
கறம்பக்குடி:
மயானம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மயிலன்கோன்பட்டி யாதவர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம் 2 கிலோ மீட்டர் தொலைவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கறம்பவிடுதி பெரியகுளம் மற்றும் பிலாவிடுதி ஆவன்கலியரான்குளம் ஆகியவற்றின் கலிங்கியை தாண்டி உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் இந்த 2 குளங்களும் நிரம்பி கலிங்கியில் தண்ணீர் நின்றால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே அப்பகுதியில் தரைப்பாலம் அல்லது மிதவை பாலம் அமைத்து தரவேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கழுத்தளவு தண்ணீரில்...
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் கறம்பவிடுதி பெரியகுளம், பிலாவிடுதி ஆவன் கலியரான்குளம் ஆகிய 2 குளங்களும் நிரம்பி கலிங்கியில் கழுத்தளவை தாண்டி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், மயிலன்கோன்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் பாடையில் சுமந்து கழுத்தளவு தண்ணீரில் எடுத்து சென்று மயானத்தில் தகனம் செய்தனர். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் மயானத்திற்கு பாதை வசதி இல்லாமல் தண்ணீரில் தத்தளித்து பிணத்தை எடுத்து செல்வது வேதனையளிக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் கூறுகையில், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அந்த 2 குளங்களின் கலிங்கு பகுதியில் மிதவை பாலம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. கலிங்கு பகுதியில் தண்ணீர் அதிகம் இருந்ததால் வேறு பகுதியில் தற்காலிக மயானம் அமைத்து தர வருவாய்த்துறை சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் அதை தவிர்த்துவிட்டனர். விரைவில் தரைப்பாலம் அல்லது மிதவைப்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சாலை வசதியில்லாமல் அவதி
அன்னவாசல் அருகே உள்ள புதூர் ஏ.டி. காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை கிடையாது. இதனால் வயல் வெளியில் இறங்கி இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம் உள்ளது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அவரது உடலை வயல் வழியாக தூக்கி சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் வயல்காடுகள் சேறும், சகதியுமாக இருந்ததால் மிகவும் சிரமத்துடன் இறந்தவரின் உடலை தூக்கி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை எடுத்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story