நகைக்காக பேரனே கொலை செய்தது அம்பலம்


நகைக்காக பேரனே கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 11 Dec 2021 11:50 PM IST (Updated: 11 Dec 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே மூதாட்டி சாவு வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்காக அவரை அவரது பேரனே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமந்தூர் தக்கா பகுதியை சேர்ந்தவர் அலிமா பீ(வயது 70). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அலிமா பீ பேரனான சல்மான் (26) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அடித்து கொலை

 இதில் அலிமா பீயை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- 
செலவுக்கு பணம் இல்லாமல் இருந்தேன். இந்த நிலையில் நான் எனது பாட்டி வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்தார். இதையடுத்து பாட்டியை கொலை செய்து அவரது நகையை திருட முடிவு செய்தேன். அதன்படி நான் கல்லை எடுத்து எனது பாட்டி என்றும் பாராமல் அவரை அடித்து கொலை செய்தேன்.

கைது

பின்னர் அவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை திருடினேன். அந்த நகையை எனது உறவினரான சவுகத்அலி (39) என்பவரிடம் கொடுத்து அடமானம் வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தை இருவரும் பிரித்து கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் சல்மான் கூறியிருந்தார். 
இதையடுத்து சல்மான் மற்றும் சவுகத்அலியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து நகை, 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.31 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்காக பாட்டியை பேரனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story