மணமேல்குடி அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
மணமேல்குடி அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடி சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி:
மளிகை கடையில் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜிப்பட்டினத்தை சேர்ந்தவர் நபிஸ்கான். இவர், கிருஷ்ணாஜிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதையடுத்து அங்கு சென்ற மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர்.
காய்கறி கடை
இதேபோல் அப்பகுதியில் உள்ள இப்ராஹிம் ஷா என்பவரது மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.42 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதேபோல் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான காய்கறி கடையின் பூட்டை உடைத்து ரூ.6 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கேமராவில் பதிவான திருடா்கள்
இந்த நிலையில் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் மர்மநபர்கள் சுற்றித்திரியும் தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் ராம பாண்டி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து ஓடினர். உடனே காவலர் ராம பாண்டி, அவர்களை விரட்டி சென்று உள்ளார். இருப்பினும் அவரால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நபிஸ்கான் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் 3 மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
அதில் 2 பேரின் முகம் நன்றாக பதிவாகி உள்ளதால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story