மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு
மூங்கில்துறைப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே புதுபட்டு பகுதியை சேர்ந்தவர் குள்ளன் மகன் மதுரைவீரன் (வயது 38) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். இந்த நிலையில் அவர் அதே பகுதியில் உள்ள துரைக்கண்ணு என்பவரின் நிலத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மதுரைவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மதுரை வீரன் அதே பகுதியில் முனியன் என்பவரது வயலில் சட்டத்தை மீறி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இறந்தது தெரிந்தது.
கைது
மேலும் மின்வேலியில் சிக்கி மதுரை வீரன் இறந்ததை மறைப்பதற்காக முனியன் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் இளையராஜா, வீரன் மற்றும் பெரியசாமி மகன் அய்யனார் ஆகியோருடன் சேர்ந்து மதுரைவீரன் உடலை அங்கிருந்து எடுத்து அருகில் உள்ள துரைக்கண்ணு வயலில் வீசிச்சென்றது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story