ஆன்லைனில் வேலை எனக்கூறி வாலிபரிடம் ரூ.2.21 லட்சம் மோசடி போலீசார் விசாரணை


ஆன்லைனில் வேலை எனக்கூறி வாலிபரிடம் ரூ.2.21 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2021 12:02 AM IST (Updated: 12 Dec 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் வேலை எனக்கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:-

ஆன்லைனில் வேலை எனக்கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறுந்தகவல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது27). இவர் வேலை தேடி கொண்டிருந்தார். இந்த நிலையில் ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக அவருடைய செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய மணிகண்டன் குறுந்தகவலில் இருந்த இணையதள முகவரிக்கு (லிங்க்) சென்று பார்த்தார். அதில் ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்து கொடுத்தால் குறிப்பிட்ட தொகை கமிஷன் கொடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மணிகண்டன் ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்தார். ரீசார்ஜ் செய்த உடனே அவருக்கு ஆன்லைன் பணி குறித்த தகவல் வந்துள்ளது. 

பணியை முடித்தால் பணம்

அவரும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த வேலையை உடனே செய்து முடித்துவிட்டதால் அவருடைய வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டது. பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் மற்றொரு வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.228 செலுத்துமாறு கூறியுள்ளனர். அவர் செலுத்திய உடன் மீண்டும் பணிக்கான தகவல் வந்துள்ளது.
தொடர்ந்து இவ்வாறு செய்ததால் அவருக்கு பணி சம்பந்தமான தகவல்களை அடிக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மணிகண்டன் ரூ.18 ஆயிரத்து 160-ஐ மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து அவருக்கு மேலும் ஒரு பணிக்கான தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் செய்த பணிக்கான தொகை அவருடைய வங்கி கணக்கிற்கு வரவில்லை. இதுகுறித்து அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘உங்களுக்கு கொடுக்கக்கூடிய பணியை தொடர்ந்து முழுவதையும் செய்து முடித்தால் தான் பணம் வரும்’ என்று கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை

அதன்படி மணிகண்டன் தன்னுடைய 2 வங்கி கணக்குகளில் இருந்தும் மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பல தவணையாக மொத்தம் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 860-ஐ செலுத்தினார். ஆனால் மணிகண்டனுக்கு எவ்விதத்திலும் அவர்களிடம் இருந்து மீண்டும் பணம் வங்கி கணக்கிற்கு வந்து சேரவில்லை. பணம் வராதது குறித்து பலமுறை கேட்டபோதும் கொடுத்த பணியை முழுவதும் முடித்தால் தான் பணம் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். 
அதன்படி தொடர்ந்து பணி செய்தும் பணம் கிடைக்காததால்  அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். பின்னர் இதுகுறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story