தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் அனைவரும் சான்றிதழுடன் வர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியும், முககவசமும், சமூகஇடைவெளியும்தான் கைகொடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தற்போதுவரை தினசரி பாதிப்பு சராசரியாக 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
பொது இடங்களில்...
கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி என்பதால் தமிழக அரசு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தெரு, மார்க்கெட், தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கூட்டம் நடக்கும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கடற்கரை, கடைகளுக்கு தடுப்பூசி போடாதவர்கள் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு அமலில் உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
2 தவணை தடுப்பூசி
எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் கொரோனா பரவாமல் இருக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதன் ஒரு பகுதியாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு்ள்ளது.
இதுதொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை முதல் அமல்
கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் 4 கோபுர வாசல்களிலும் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
சான்றிதழ் நகல்
1. கொரோனா தடுப்பூசி சான்றிதழ் நகல்.
2. செல்போனில் சான்றிதழ் பதிவிறக்கம்.
3. பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக வந்துள்ள குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.).
4. ‘வாட்ஸ்-அப்’ மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்திருத்தல்.
5. மேற்கண்ட ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் செல்போன் எண் மூலமாக கோவில் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்வது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கள்ளழகர் கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோவிலிலும் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு கோவில் வளாகத்திற்கு அருகிலேயே தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள ஏதுவாக மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story