திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியை பக்தர்கள் முற்றுகை


திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியை பக்தர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Dec 2021 1:07 AM IST (Updated: 12 Dec 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியை பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

ஏர்வாடி:

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலைநம்பி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனி மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி திருமலைநம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திடீர் என ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்பு குழுவினர் கயிறு கட்டி மீட்டனர். அதனைதொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருமலைநம்பி கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் வனத்துறை சோதனை சாவடி முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பெண்கள் உள்பட சிலர் செல்ல மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கியதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் ஆராய்ச்சிக்காக தலைமை வன பாதுகாவலரிடம் அனுமதி வாங்கி வந்தவர்களை மட்டுமே அனுமதித்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் சோதனை சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story