மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயிலுக்கு கொல்லம் வரை இணைப்பு ரெயில்
மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயிலுக்கு கொல்லம் வரை இணைப்பு ரெயில் 15-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
மதுரை,
மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயிலுக்கு கொல்லம் வரை இணைப்பு ரெயில் 15-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் கட்டணம்
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பயணிகள் ரெயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. ஒரு சில பயணிகள் ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. ஆனால், அந்த ரெயில்கள் அனைத்தும் ரெயில்வே விதிகளுக்கு முரணாக எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. அதிலும் சில ரெயில்கள் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு எண்ணிலும், அங்கிருந்து வேறு எண்ணிலும் புறப்பட்டு செல்லும்படி குளறுபடியாக இயக்கப்படுகிறது.
இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கிடையே, மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட 3 பயணிகள் ரெயில்களில் காலை 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயிலாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
இந்த ரெயில் (06504) மதுரையில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06503) செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த நிலையில், செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு வருகிற 15-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06659) செங்கோட்டையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.35 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06660) கொல்லத்தில் இருந்து வருகிற 16-ந் தேதி முதல் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
12 பொதுப்பெட்டிகள்
இந்தரெயிலில் 12 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 பார்சல் வேனுடன் இணைந்த பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். ஆரியங்காவு, இடப்பாளையம், கல்துருத்தி, ஒத்தக்கல், குரி, குந்த்ரா கிழக்கு, சந்தனதோப்பு ஆகிய ரெயில் நிலையங் களுக்கான நிறுத்தங்களில் இனி வருங்காலங்களில் ரெயில் நிறுத்தப்படும். செங்கோட்டை-கொல்லம் ரெயில் பாதையில் உள்ள பிற ரெயில் நிலையங்களில் இந்த ரெயில்கள் நின்று செல்லும்.
மதுரையில் இருந்து பகல் நேரத்தில் கொல்லம் செல்ல விரும்பும் பயணிகள் மதுரை-செங்கோட்டை ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இந்த ரெயிலை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story