கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்


கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2021 1:16 AM IST (Updated: 12 Dec 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

வெல்லம், கருப்பட்டி தயாரிப்பு ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர், 
வெல்லம், கருப்பட்டி தயாரிப்பு ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
 அறிவுறுத்தல் 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
விருதுநகர் மாவட்டத்தில் உருண்டை வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, வெல்லம் தயாரிப்பவர் மற்றும் மொத்த விற்பனையாளர்கள், வெல்லம் வெண்மையாக இருப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டு, காஸ்டிக்சோடா மற்றும் இதர வேதிப்பொருட்களும், ரேஷன் அரிசி மற்றும் அஸ்கா சர்க்கரை ஆகியவை கலப்படம் செய்யப்படுவதை தவிர்க்கும் பொருட்டு அறிவுரை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பண்டிகை மற்றும் வீட்டு உபயோகத்துக்காக வாங்கும் வெல்லம் தரமானதா என பார்த்து வாங்க வேண்டும்.
 கலப்பட வெல்லம் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். அடர் மஞ்சள், வெளிர்மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெல்லத்தில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். வேதிப்பொருட்கள் கலந்த வெல்லத்தை சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
கண்காணிப்பு கேமரா 
 எனவே தரமான முறையில் கலப்படமில்லாத வெல்லம் மற்றும் கருப்பட்டி தயாரிப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஆலை உரிமையாளர்கள் தங்களுடைய தயாரிப்பு மற்றும் இருப்பு கூடங்களில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்காணிப்பு கேமரா பொருத்தாத உரிமையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி வெல்லம் மற்றும் கருப்பட்டி போன்ற தயாரிப்புகளில் கலப்படம் ஏதேனும் கண்டறியப்பட்டாலும் மற்றும் வினியோகஸ்தர்கள் கலப்படம் செய்யப்பட்டதை விற்பனை செய்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 புகார் செய்யலாம் 
பொது மக்கள் வெல்லம் மற்றும் கருப்பட்டி போன்ற உணவுப்பொருட்களின் தரம் குறைவான மற்றும் கலப்படம் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் 94440 42322 என்ற எண்ணிற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தின் 04562 252255 என்ற டெலிபோன் எண்ணிற்கு புகார் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story