‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 12 Dec 2021 1:18 AM IST (Updated: 12 Dec 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில், வைத்தித்தோப்பு திரும்பும் இடத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், தஞ்சை.

தொற்று நோய்கள் பரவும் அபாயம் 

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள திருப்பதி நகரில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பாதாள சாக்கடை குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதா சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.

ஆபத்தான பயணம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இருந்து சீர்காழிக்கு இயக்கப்படும் பஸ்சில் தினமும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் அதிகளவில் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் குறைந்தளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிகட்டு மற்றும் பின்புறத்தில் உள்ள கம்பியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடுமோ? என மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?                      
-ஜாசித், தஞ்சை.

Next Story