தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1727 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1727 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,727 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையை முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் தீர்த்து வைப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதேபோன்று அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.
சமரச தீர்வு
இதில் நீதிமன்ற நிலுவையில் உள்ள 2,008 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1,670 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டது. அதற்கான சமரச தொகை ரூ.7 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 606-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.
இதேபோல் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வாராக்கடன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 57 வழக்குகள் பேசி தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 60-க்கு முடிக்கப்பட்டது. இதன்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,727 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டு ரூ.9 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 666-க்கு முடிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story