கந்திகுப்பம் நகைக்கடைகளின் சுவர்களில் துளையிட்டு ரூ20 லட்சம் நகை பணம் கொள்ளை


கந்திகுப்பம் நகைக்கடைகளின் சுவர்களில் துளையிட்டு ரூ20 லட்சம் நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 12 Dec 2021 1:19 AM IST (Updated: 12 Dec 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே 2 நகைக்கடைகளின் சுவர்களில் துளையிட்டு ரூ20 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை முகமூடி அணிந்து வந்த 7 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பர்கூர்:
கந்திகுப்பம் அருகே 2 நகைக்கடைகளின் சுவர்களில் துளையிட்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை முகமூடி அணிந்து வந்த 7 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நகைக்கடைகள் 
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ளது வரட்டனப்பள்ளி. இந்த பகுதியில் குப்பம் செல்லும் சாலையில் 2 நகைக் கடைகள் உள்ளன. இதில் சிறிய அளவில் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் நகைகளுக்கு கடனும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு கடையை கிருஷ்ணகிரியை சேர்ந்த குமார் (வயது41) என்பவர் நடத்தி வருகிறார். மற்றொரு கடையை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பவர் நடத்தி வருகிறார். கடைகளையொட்டி கட்டிடத்தின் உரிமையாளரான கேசவன் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அவரது மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோர் ஓசூரில் இருந்தனர். 
முகமூடி கொள்ளை கும்பல் 
இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் கேசவன் வீட்டின் கதவை சிலர் தட்டினார்கள். தனது மகன் தான் ஊரில் இருந்து வந்துள்ளார் என எண்ணி கேசவன் கதவை திறந்தார். அப்போது முகமூடி அணிந்த நிலையில் நின்ற 7 பேர் கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கேசவனை மிரட்டி நாங்கள் உன் வீட்டில் கொள்ளையடிக்க வரவில்லை. 
உனது கட்டிடத்தில் உள்ள நகைக்கடைகளில் தான் கொள்ளையடிக்க வந்துள்ளோம். உனது வீட்டின் சுவரை உடைத்து தான் உள்ளே போக போகிறோம். நீ சத்தம் போடாமல் இருந்தால் உயிரோடு விட்டு விடுவோம். சத்தம் போட்டால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டினார்கள்.
சுவர்களில் துளை
இதனால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போன கேசவனை அருகில் உள்ள அறையில் அந்த நபர்கள் அடைத்து பூட்டு போட்டனர். மேலும் கேசவனின் செல்போனை உடைத்தனர். இதன் பிறகு அவரது வீட்டின் சுவரை உடைத்து ஒரு நகைக்கடையின் உள்ளேயும், மற்றொரு நகைக்கடையில் பின்புறமாக துளையிட்டும் கொள்ளையர்கள் நுழைந்தனர்.
பின்னர் 2 நகைக்கடைகளில் இருந்தும் 12 கிலோ வெள்ளி நகைகள், 23 பவுன் தங்க நகைகள்  மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அவர்கள் உடைத்து போட்டு சென்று விட்டனர்.
போலீசுக்கு தகவல்
இந்த நிலையில் நேற்று காலையில் கேசவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் பூட்டை உடைத்து கேசவனை மீட்டனர். 2 நகைக்கடைகளில் நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும், கந்திகுப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை நடந்த  நகைக்கடைகளை பார்வையிட்டனர்.
பரபரப்பு 
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கேசவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் தெலுங்கு மொழியில் பேசியது தெரிய வந்தது. இதனால் அவர்கள் அருகில் உள்ள ஆந்திர மாநில குப்பம் பகுதியை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  முகமூடி அணிந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பர்கூர் அருகே வரட்டனப்பள்ளியில் 2 நகைக் கடைகளின் சுவர்களில் துளை போட்டு ரூ.20 லட்சம் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story