மதுரை-கோவை இணைப்பு ரெயில் பழனியில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம்


மதுரை-கோவை இணைப்பு ரெயில் பழனியில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம்
x
தினத்தந்தி 12 Dec 2021 1:32 AM IST (Updated: 12 Dec 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மதுரை-கோவை இணைப்பு ரெயில் பழனியில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

மதுரை, 
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மதுரை-கோவை இணைப்பு ரெயில் பழனியில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
கூடுதல் கட்டணம்
மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு இணைப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதாவது, கொரோனா ஊரடங்குக்கு முன்னர் பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட இந்த ரெயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரெயிலாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06480) மதுரையில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.10 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடைகிறது. 
அதே ரெயில் பழனியில் இருந்து வண்டி எண் மட்டும் மாற்றப்பட்டு (வ.எண்.06462) காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து அந்த ரெயில் (வ.எண்.06463) மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு பழனி ரெயில் நிலையம் வந்தடைகிறது.
குற்றச்சாட்டு
 மீண்டும் பழனியில் இருந்து வண்டி எண் மாற்றப்பட்டு (வ.எண்.06479) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இதில், மதுரையில் இருந்து செல்லும் ரெயில் பழனியில் எவ்வித காரணமும் இன்றி சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு கோவைக்கு இயக்கப்படுவதாக பயணிகள் நலச்சங்கங்கள் மற்றும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, ‘தினத்தந்தி’யில் கடந்த 1-ந் தேதி மதுரை-கோவை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேர விரயத்தால் பயணிகள் அவதி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
சிறப்பு ரெயில் 
இந்த நிலையில், மதுரை-கோவை சிறப்பு ரெயில் பழனியில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில், கோவையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு பழனி ரெயில் நிலையம் வந்தடையும்படி இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரெயில்வேயின் இந்த அறிவிப்புக்கு மதுரை மற்றும் பழனி, கோவை பயணிகள், பயணிகள் நலச்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Next Story