குமரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் தகனம்
காஷ்மீரில் இறந்த குமரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அஞ்சலி செலுத்தினர்.
குலசேகரம்,
காஷ்மீரில் இறந்த குமரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ வீரர்
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அண்டூர் புல்லை சாஸ்தான் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் எல்லை பகுதியில் பணியாற்றினார். கடந்த 8-ந் தேதி கிருஷ்ணபிரசாத் அங்குள்ள பதுங்கு குழி பகுதியில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணபிரசாத் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கலெக்டர் அஞ்சலி
இந்தநிலையில், ராணுவ வீரரின் உடல் காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலையில் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், காலை 7.30 மணியளவில் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. உடலுடன் திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ முகாமிலுள்ள ராணுவ வீரர்கள் உடன் வந்தனர்.
பின்னர் 11-வது தமிழ்நாடு பெட்டாலியன் நாகர்கோவில் என்.சி.சி. அதிகாரி அன்சார் தலைமையில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை மற்றும் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
தொடர்ந்து 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அயக்கோடு ஊராட்சித் தலைவர் செலப்பன், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குற்றியாறு நிமால், திருவட்டார் மேற்கு தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜான்சன், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் ஷீபா பிரசாத், அண்டூர் நாயர் சேவா சங்க தலைவர் டாக்டர் கிருஷ்ண பிரசாத், முன்னாள் ராணுவ வீர்ர்கள், குமரி ஜவான்ஸ் மற்றும் திரளான ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
உயிரிழந்த ராணுவ வீரர் கிருஷ்ண பிரசாத்துக்கு சவுமியா (30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இறுதி சடங்கு நிகழ்ச்சியின் போது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதது அங்கு திரண்டிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது.
Related Tags :
Next Story