மதமாற்ற தடை சட்டத்தை காங்கிரஸ் அனுமதிக்காது - டி.கே.சிவக்குமார் பேட்டி
மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
காங்கிரஸ் அனுமதிக்காது
கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை, பெலகாவியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின் போது அமல்படுத்த பா.ஜனதா அரசு முன்வந்திருக்கிறது. இந்த சட்டத்தை கர்நாடகத்தில் அமல்படுத்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதால், கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு ஏதேனும் உதவிகரமாக இருக்குமா?.
மதமாற்ற தடை சட்டம் பற்றி கர்நாடகத்தில் மட்டும் விவாதிக்க போவதில்லை. இந்த சட்டம் பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கப்படும். இந்த சட்டத்தை அமல்படுத்தினால் கர்நாடகத்தில் முதலீடு செய்ய பிற நாடுகளை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். வியாபாரம், தொழில் ஆகியவை பாதிக்கப்படும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது.
சட்டசபை தேர்தலுக்காக...
வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மதமாற்ற தடை சட்டத்தை பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய பா.ஜனதா அரசு முன்வந்திருக்கிறது. மாநிலத்தில் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு சேர்ந்த ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருக்கிறது. இந்த சட்டத்தை ஆதரிப்பவர்களால், அந்த சமுதாயத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் நிலை கேள்வி குறியாகும்.
இந்த சட்டத்தை வைத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்து, சட்டசபை தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். கர்நாடக மேல்-சபை தேர்தலில் 15 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க எத்தனை இடங்கள் தேவையோ, அத்தனை தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக அறிவித்து கொள்ளட்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story