சேலம் மாவட்டத்துக்கு ரூ.1,242 கோடியில் புதிய திட்டங்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சேலம் மாவட்டத்துக்கு ரூ.1,242 கோடியில் புதிய திட்டங்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2021 2:46 AM IST (Updated: 12 Dec 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,242 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து ரூ.400 கோடி செலவில் நமக்கு நாமே, நகர்புற வேலைவாய்ப்பு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

சேலம்:
சேலம் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,242 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து ரூ.400 கோடி செலவில் நமக்கு நாமே, நகர்புற வேலைவாய்ப்பு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
மு.க.ஸ்டாலின் வருகை
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாநில அளவில் நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடக்க விழா சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9.40 மணிக்கு ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். 
பின்னர் அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம் வரவேற்றார்.
நமக்கு நாமே திட்டம்
விழாவில், மாநில அளவில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரூ.54 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.38.52 கோடியில் 12 துறைகளின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 83 திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். 
இதைத்தொடர்ந்து ரூ.168 கோடியே 64 லட்சம் மதிப்பில் 30 ஆயிரத்து 837 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சேலம் மாவட்டத்துக்கு ரூ.1,242 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
மகத்தான பெருமை
சேலத்தில் நடைபெறுகிற இந்த விழா எனக்கு ஒரு உணர்வையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது. இது அரசு விழாவா? அல்லது அரசாங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளதா? என சந்தேகப்படும்படி விழா நடந்து கொண்டிருக்கிறது. 
சேலம் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேருவை நியமித்து இருக்கிறோம். அவரை பொறுத்தவரையில் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு விழாவாக இருந்தாலும் திறம்பட நடத்தி முடிக்கக்கூடியவர். சாதாரண நிகழ்ச்சியாக இல்லாமல் மிகப்பிரமாண்டமான முறையில் நடத்தி முடிப்பார். அமைச்சர் நேருவுக்கு நிகர் அவர் மட்டுமே. திருச்சியில் எப்படி அவர் பணியாற்றி வருகிறாரோ? அதேபோல் தற்போது சேலத்திலும் அவரது பணி தொடர்ந்து வருகிறது.
திராவிட இயக்க வரலாற்றில் சேலம் மிகப்பெரிய பங்கை பெற்றுள்ளது. பேரறிஞர் அண்ணா தலைப்பிட்டு தீர்மானமாக கொண்டு வந்த நீதிக்கட்சி, திராவிட கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலம் மாவட்டத்தில் தான். இதையெல்லாம் தாண்டி இன்னொரு மகத்தான பெருமை உண்டு.
தி.மு.க. ஆட்சியில்...
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சில ஆண்டுகாலம் வாழ்ந்த ஊர் தான் சேலம். 1949-50-ம் ஆண்டில் சேலம் கோட்டை பகுதியில் ஹபீப் தெருவில் தான் அவர் வாழ்ந்தார். அந்த அடிப்படையில் நான் என்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதுதான் எனக்கு பெருமை.
அதேபோல், மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், எத்தனையோ முறை என்னை சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார். கட்சி பொதுக்கூட்டம், மாநாடு மற்றும் அரசு விழாவில் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும் இருந்தபோது வீரபாண்டி ஆறுமுகம் என்னை அழைத்து வந்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு முதல்-அமைச்சராக வந்துள்ளேன். ஆனால், இன்று அவர் இல்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோது, கருணாநிதியிடம் வாதாடி, போராடி பல்வேறு திட்டங்களை சேலத்திற்கு கொண்டு வந்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சேலம் மாவட்டம் தான் அதிகளவில் சலுகைகளை பெற்றது. இதை நான் நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.
பல்வேறு திட்டங்கள்
சேலம் உருக்காலை, 50 ஆண்டுகள் கனவாக இருந்த சேலம் ரெயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஆத்தூரில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி, சேலம் மாநகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், திருமணிமுத்தாற்றை தூய்மைப்படுத்தும் பணி, சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, மாவட்டத்தில் 9 உழவர் சந்தைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மேட்டூரில் 600 மெகாவாட் புதிய அனல் மின்நிலையம், ஆத்தூர், சங்ககிரி, ஓமலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சேலம்-கிருஷ்ணகிரி மற்றும் சேலம்-நாமக்கல் இடையே 4 வழிச்சாலை, சேலம் விமான சேவையை மீண்டும் தொடங்கியது என தி.மு.க. ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 
அதேசமயம், இதைவிட அதிக சாதனைகளை கொண்டு வர தயாராக உள்ளோம். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த விழா நடக்கிறது. ஆற்றல் மிக்கவரான நேருவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அறிவித்து உள்ளோம். நேரு வந்தார், நேரு வென்றார் என்ற பெயரை அவர் எடுப்பார்.
50 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு
சேலம் மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் அமைச்சர் கே.என்.நேரு சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து 35 ஆயிரத்து 217 மனுக்களை பெற்றார். அதில், 10 ஆயிரத்து 623 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் துறை ரீதியாக ஆய்வு செய்து அதற்கும் உரிய தீர்வு காணப்படும். 
தற்போது எங்கு போனாலும் என்னையும், அமைச்சர்களையும் பொதுமக்கள் புன்னகையோடு வரவேற்கிறார்கள். அந்த முகத்தை எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு மிகுந்த தெம்பை தருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஒரு ஆட்சி நடந்தது. அதைப்பற்றி நான் இங்கு குறிப்பிட்டு அரசியல் பேச விரும்பவில்லை. அதற்கு அவசியமும் கிடையாது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றபோது, மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான், எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாது, வாக்களிக்காதவர்களையும் கவரும் வகையில் ஆட்சி இருக்கும் என்று சொன்னேன். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்றோம். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் 50 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வறுமை இல்லாத பட்டியலில்...
நான் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் வலியுறுத்துவது என்னவென்றால் சமச்சீரான வளர்ச்சியை தான். இந்த தொழில், அந்த தொழில் என்ற எண்ணம் கிடையாது. இந்த மாவட்டம், அந்த மாவட்டம் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. 
தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் சமச்சீர் வரவேண்டும் என்றால் சம உரிமைகளுடன் இருக்கக்கூடிய திட்டங்களை உருவாக்கி தர வேண்டும். அந்த வகையில் எல்லா மாவட்டங்களுக்கும் இதுபோன்ற ஏராளமான திட்டங்களை தீட்டி நாங்கள் தொடங்கி வைத்து கொண்டிருக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்பு வறுமை குறைவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தான் இதற்கு காரணம். ஆனால் அது எனக்கு முழு மகிழ்ச்சியை தரவில்லை. 
வறுமையை முழுவதுமாக ஒழிக்கணும். தமிழ்நாட்டில் பசி என்பது இல்லை என்ற நிலையை உருவாக்கணும். வறுமை இல்லாத பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதற்காக தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
உழைப்பு, உழைப்பு
இன்னும் 5 ஆண்டில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் பிடிக்கும். அதற்கு தான் நாள், நேரம் பார்க்காமல் உழைக்கிறோம். மு.க.ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என்று கருணாநிதி அடிக்கடி கூறுவார். அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நான் உழைத்து கொண்டிருக்கிறேன். முதலில் கொரோனா வந்தது. அதனை விரட்டினோம். பின்னர் மழை வந்தது. அந்த துயரத்தில் இருந்து தற்போது மீண்டுள்ளோம். இந்த ஆட்சியில் திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் அமைதியாக இருந்து விடமாட்டேன். மீண்டும், மீண்டும் வருவேன். தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்வேன். நான் ஓய்வை என்றும் விரும்பியது இல்லை. உங்களுக்காக உழைத்து கொண்டே இருப்பேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முத்துசாமி, டாக்டர் மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்.கவுதமசிகாமணி, சின்ராஜ், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story