ரூ.25 கோடியில் கொலுசு உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்க உற்பத்தி மையம்:சேலத்தில் ஜவுளி பூங்கா-ரெயில்வே மேம்பாலம்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சேலத்தில் ரூ.25 கோடியில் கொலுசு உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்க உற்பத்தி மையம் மற்றும் ஜவுளி பூங்கா-ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம்:
சேலத்தில் ரூ.25 கோடியில் கொலுசு உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்க உற்பத்தி மையம் மற்றும் ஜவுளி பூங்கா-ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதிய திட்டங்கள்
சேலத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்துக்கு ரூ.1,242 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் ரூ.530 கோடியில் 520 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும், கழிவுநீர் உந்து நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளும் செயல்படுத்தப்படும். சேலம் மாநகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.158 கோடியில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஜவுளி பூங்கா
சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி மற்றும் அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும். சேலம் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ரூ.120 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
சேலம் மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக ரூ.20 கோடி செலவில் மாவட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய பெரும் ஜவுளி பூங்கா சேலத்தில் அமைக்கப்படும்.
கொலுசு உற்பத்தி மையம்
வெள்ளி கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கக்கூடிய சேலத்தில், 100 கொலுசு உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக ரூ.25 கோடி செலவில் பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்படும். இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Related Tags :
Next Story