பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. பிட்காயின் விவகாரம், மழை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு:
குளிர்கால கூட்டத்தொடர்
கர்நாடக சட்டசபை ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. அதாவது பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத் தொடர் ஆகிய 3 சட்டசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூருவில் உள்ள விதானசவுதாவில் நடத்தப்பட்டு வருகிறது.
அதுபோல் ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சுவர்ண விதானசவுதாவில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாமல், பெங்களூரு விதானசவுதாவிலேயே நடைபெற்றது. இந்த ஆண்டும் ஒமைக்ரான் வைரஸ் பீதி காரணமாக பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுமா?, இல்லையா? என்பது பற்றிய குழப்பம் நீடித்தது.
பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரை உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பெலகாவி சுவர்ண சவுதாவில் சட்டசபையை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் காகேரியும் அறிவித்தார்.
சட்டசபை நாளை கூடுகிறது
அதன்படி, குளிர்கால கூட்டத்தொடருக்காக பெலகாவி சுவர்ண சவுதாவில், கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. நாளை தொடங்கும் கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை), 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பெலகாவி சுவர்ண சவுதாவில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் பெலகாவி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பிட்காயின் விவகாரம்
மேலும் கொரோனா பரிசோதனை செய்ய 2 மருத்துவ குழுக்களும் பெலகாவி சுவர்ண சவுதாவில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் சுவர்ண சவுதா முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் சமூக இடைவெளியுடன் அமருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஏற்பாடுகளை சபாநாயகர் காகேரியும் பார்வையிட்டு இருந்ததுடன், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்த கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினை எழுப்பி நெருக்கடியில் சிக்க வைக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் முடிவு செய்துள்ளது.
பிட்காயின் முறைகேடு, கமிஷன் விவகாரம்
குறிப்பாக கர்நாடகத்தில் நடந்த பிட்காயின் விவகாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறி வருகிறது. அதுபோல் அரசின் திட்டங்களை டெண்டர் எடுக்கும் குத்தகைதாரர்களிடம் ஆளுங்கட்சியினர் 40 சதவீதம் கமிஷன் பெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அத்துடன் கர்நாடகத்தில் பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் மழை-வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எனவே குளிர்கால கூட்டத்தில் பிட்காயின் முறைகேடு, அரசு திட்ட டெண்டர்களில் 40 சதவீத கமிஷன் விவகாரம் மற்றும் மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது, கியாஸ், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இந்த குளிர்கால கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், மந்திரிகளும் தயாராகி வருகிறார்கள்.
மதமாற்ற தடை சட்டம்
இதற்கிடையே கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெலகாவியில் நடைபெறும் கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்டம் உள்ளிட்ட சில சட்ட மசோதாக்களை தாக்கல் செய்யவும் அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் மதமாற்ற தடை சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் மகதாயி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. முக்கியமாக கல்யாண கர்நாடகா, கித்தூர் கர்நாடகா மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது, அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெரும்பாலும் விவாதிக்கப்பட இருக்கிறது.
அரசு நிர்வாகம் மாற்றம்
நாளை தொடங்கும் முதல் நாள் கூட்டத்தொடரின் போது ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிபின் ராவத் உள்ளிட்ட விமானப்படை வீரர்களுக்கும், சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், பெலகாவி சுவர்ண சவுதாவில் நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால், பெங்களூருவில் உள்ள முக்கிய அரசு துறைகள் பெலகாவிக்கு மாற்றப்பட்டுள்ளன.
அந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் பெலகாவிக்கு சென்றுள்ளனர். அரசின் நிர்வாகமும் பெலகாவிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரின் போது விவசாயிகள், பிற அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு தயாராகி வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு
பெலகாவி சுவர்ண சவுதாவில் ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2019-ம் ஆண்டும், கடந்த ஆண்டும் (2020) பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. தற்போதும் நீண்ட ஆலோசனைக்கு பின்பு பெலகாவி சுவர்ண சவுதாவில் கூட்டத்தொடரை நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுவர்ணசவுதாவில் பெலகாவி மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
போலீசார் மத்தியில் கொரோனா பீதி
பெலகாவி சுவர்ணசவுதாவில் 2 ஆண்டுக்கு பின்பு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவதால், கரும்பு விவசாயிகள், பிற விவசாய சங்கங்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதையடுத்து, சுவர்ணசவுதாவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்காக சுவர்ணசவுதா பின்புறம் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டு, போலீசார் தங்குவதற்கும், படுப்பதற்காகவும் வரிசையாக படுக்கைகள் போடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் படுக்கைகள் இருப்பதால், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story