பெத்தநாயக்கன்பாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 24 பெண்கள் படுகாயம்-மு.க.ஸ்டாலினை வரவேற்க வந்த போது விபத்து
பெத்தநாயக்கன்பாளையம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வந்த போது ஏற்பட்ட விபத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 24 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வந்த போது ஏற்பட்ட விபத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 24 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாணவன் ஓட்டி வந்த வாகனம்
சேலத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரை வரவேற்க சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள், தி.மு.க. தொண்டர்கள் திரண்டுவந்தனர்.
இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள சின்னம்மாசமுத்திரம் பகுதியில் இருந்து 24 பெண்கள் உள்பட 25 பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க ஒரு சரக்கு வாகனத்தில் சேலத்துக்கு புறப்பட்டு வந்தனர். அந்த வாகனத்தை பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
25 பேர் படுகாயம்
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளிசெட்டியூர் பகுதியில் சரக்கு வாகனம் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் வந்த 25 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சின்னம்மாசமுத்திரத்தை சேர்ந்த புஷ்பா (வயது 55), சின்னப்பொண்ணு (58), உமா (40), சரோஜா (60), மாணிக்கம் (50), சத்யா (36) ஆகிய 6 பேர் சேலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஞானாம்பாள் (50), பழனியம்மாள் (50), சித்ரா (33), ராமாயி (50) ஆகிய 4 பேர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், கலைச்செல்வி (40), கவிதா (35), வெள்ளையம்மாள் (50), கோதையம்மாள் (55), சின்னக்கண்ணு (62), அம்ரிதம் (60), பாப்பாத்தி (65), தெய்வானை (65), கருப்பாயி (65), கோவிந்தம்மாள் (60), கற்பகம் (33), மருதம்மாள் (55) ஆகியோர் உள்பட 15 பேர் பெத்தநாயக்கன்பாளையம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணை
இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த மாணவனிடமும் விசாரணை நடந்து வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வந்த போது விபத்தில் சிக்கி 24 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story