சின்ன குன்னூரில் பொதுமக்கள் தர்ணா


சின்ன குன்னூரில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 12 Dec 2021 8:26 PM IST (Updated: 12 Dec 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

சின்ன குன்னூரில் பொதுமக்கள் தர்ணா

ஊட்டி

கோவில் கும்பாபிஷேக விழாவில் அனுமதிக்க மறுத்ததால்  சின்ன குன்னூரில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பாபிஷேக விழா

ஊட்டி அருகே சின்ன குன்னூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஹிரியோடையா கோவிலில் அம்மனை அழைத்தல் என்ற சடங்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சமீபத்தில் கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து, தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஒரு தரப்பினரிடம் வரி வசூலிக்க வில்லை. மேலும் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த தரப்பினர் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர். 

தர்ணா போராட்டம்

அதில் ஒரு தரப்பினர் கோவில் விழாக்களில் பங்கேற்க கூடாது. ஊரில் உள்ள பொது தொகையில் எந்த உரிமையும் இல்லை என்று மற்றொரு தரப்பினர் கூறினர். இதுதொடர்பாக ஊட்டி ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தி வரிவசூல் செய்ய வேண்டும் என்றும், கோவில் விழாக்களில் பங்கேற்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க கோரி சின்ன குன்னூரில் ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். 

போலீசார் பேச்சுவார்த்தை 

இது குறித்து தகவல் அறிந்த தேனாடுகம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில்  முடிவு எட்டவில்லை. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சின்ன குன்னூரில் ஒரு தரப்பு மக்களை ஒதுக்கி வைத்து உள்ளனர். மேலும் எங்களை இழிவுப்படுத்து கின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story