தளவானூர், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த தளவானூர், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் தளவானூருக்கும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலத்திற்கும் இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அணைக்கட்டில் கடந்த ஜனவரி மாதம் எனதிரிமங்கலத்தில் உள்ள கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 3 மதகுகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அதன் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையினால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடந்த மாதம் 9-ந் தேதி தளவானூரில் உள்ள அணைக்கட்டின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 3 மதகுகளும் உடைந்து சேதமடைந்தது. மேலும் தண்ணீர் அதிகரித்து வந்ததால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகாமல் தடுத்து நேராக கடலுக்கு செல்லும் வகையில் தளவானூர் அணைக்கட்டின் 3 மதகுகள் மற்றும் இடதுபுற கரைப்பகுதியை பொதுப்பணித்துறையினர் வெடி வைத்து தகர்த்தனர்.இந்த அணைக்கட்டை சீரமைக்க ஏற்கனவே ரூ.15 கோடியே 30 லட்சத்தில் கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக அணைக்கட்டு கட்ட வேண்டியுள்ளதால் கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கோப்புகள் அனுப்ப பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
இந்நிலையில் சென்னை பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தளவானூருக்கு நேரில் சென்று அங்கு சேதமடைந்த அணைக்கட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசிடம் இருந்து நிதி வரப்பெற்றதும் அணைக்கட்டை தரமான முறையில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி பொதுப்பணித்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டையும் கண்காணிப்பு பொறியாளர் முத்தையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் வித்தேஸ்வரர் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story