புகையிலை பொருட்கள் விற்ற வடமாநில வாலிபர் உள்பட 3 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற வடமாநில வாலிபர் உள்பட 3 பேர் கைது
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வடமாநில வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 515 கிலோ பறிமுதல் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் ஊத்துக்குளியில் போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள் விற்பனை
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையத்தில் உள்ள ஒரு பேக்கரி அருகே ஒருவர் மொபட்டில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பதுருன்னிசா பேகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் மொபட்டில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பர்சிங் (வயது 38) என்பதும், தற்போது அவினாசி பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவினாசி கைகாட்டிபுதூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வெளியில் விற்பனை செய்வதாக தல்பர்சிங் போலீசாரிடம் தெரிவித்தார்.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் தல்பர்சிங்கை அழைத்துக்கொண்டு மகேந்திரன் கடைக்கு சென்றனர். அங்கு போலீசார் சோதனை நடத்தியபோது மூடையில் ஏராளமான புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தல்பர்சிங், மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்டன்நகர் பகுதியில் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சங்கர்கணேஷ் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி மற்றும் திருப்பூர் வடக்கு போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை சாக்லெட்
ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சிட்கோ முதலிபாளையம் பகுதியில் நேற்று சிறப்பு போலீசார் மளிகைக் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (55) என்பவரது கடையில் போதை சாக்லெட் மற்றும் புகையிலை பொருட்கள் போன்றவற்றை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 100 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் சொக்கலிங்கத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story