சூளகிரி அருகே வழி விடாததால் டிரைவரை தாக்கி லாரி கண்ணாடி உடைப்பு ஆம்னி பஸ் டிரைவர் கிளீனர் கைது
சூளகிரி அருகே வழி விடாததால் டிரைவரை தாக்கி லாரி கண்ணாடியை உடைத்த ஆம்னி பஸ் டிரைவர் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே வழி விடாததால் டிரைவரை தாக்கி லாரி கண்ணாடியை உடைத்த ஆம்னி பஸ் டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
சென்னை வண்ணாரபேட்டை மேற்கு கிருஷ்ணப்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). கன்டெய்னர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அலகுபாவி என்ற இடத்தில் அவர் லாரியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சுக்கு லாரி டிரைவர் சண்முகம் சிறிது தூரம் வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆம்னி பஸ்சின் டிரைவர் பஸ்சை லாரியின் குறுக்கே நிறுத்தினார்.
கண்ணாடி உடைப்பு
பின்னர் ஆம்னி பஸ்சின் டிரைவர், கிளீனர் ஆகியோர் கீழே இறங்கி, லாரி டிரைவரை தாக்கி லாரியின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி மற்றும் முன்புற கண்ணாடி ஆகியவற்றின் மீது பெரிய கற்களை தூக்கி போட்டனர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதுதொடர்பாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தினார். அதில் கன்டெய்னர் லாரி டிரைவரை தாக்கி கண்ணாடியை உடைத்த ஆம்னி பஸ் டிரைவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணம் பக்கமுள்ள வளிஹரஅள்ளியை சேர்ந்த சிக்கேகவுடா (வயது 24) என்பதும், கிளீனர் பெங்களூரு சிக்கஜாலா பக்கமுள்ள வணினஅள்ளியை சேர்ந்த பிரசாத் (25) என்பதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
இதையடுத்து ஆம்னி பஸ் டிரைவர் சிக்கேகவுடா, கிளீனர் பிரசாத் ஆகிய 2 பேரையும் சூளகிரி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Related Tags :
Next Story