திருப்பூரில் காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை
திருப்பூரில் காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை
அனுப்பர்பாளையம், டிச.13-
திருப்பூரில் காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
காய்கறிகள் விலை உயர்வு
தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக பருவமழை பரவலாக பெய்துள்ளது. பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இதனால் காய்கறிகள் மற்றும் பயிர்வகைகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதையொட்டி திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்துள்ளன.
இதன் காரணமாக திருப்பூரில் காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் நேற்று பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய் ஆகியவை 1 கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. பீட்ரூட் 1 கிலோ ரூ.47-க்கும், ஆந்திரா தக்காளி 1 கிலோ ரூ.50-க்கும், நாட்டு தக்காளி 1 கிலோ ரூ.33 என்ற அடிப்படையில் மொத்த விலையிலும் விற்பனையானது. இதேபோல் 1 கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்பட்டது. கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளும் வழக்கமான விலையை விட அதிக விலைக்கு நேற்று விற்கப்பட்டன.
இல்லத்தரசிகள் கவலை
காய்கறி விலை திடீரென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டினார்கள். தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று தெரிகிறது.
இதுமட்டுமின்றி கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து, காய்கறியுடன் கூடிய சைவ உணவை மட்டும் சாப்பிடுவார்கள் என்பதால் இதுவும் காய்கறி விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story