விவசாயி வீட்டில் ரூ.27 லட்சம் நகைகள் கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.27 லட்சம் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 12 Dec 2021 11:41 PM IST (Updated: 12 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் ரூ.27 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன்(வயது 51). விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
 இந்த நிலையில் நேற்று காலை திரும்பி வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. மேலும் வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 50 பவுன் நகை, 13 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.23 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் ராஜேஷ் கண்ணன் அதிர்ச்சி அடைந்தார். 

ரூ.27 லட்சம் நகைகள் கொள்ளை 

இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், வடபொன்பரப்பி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வீரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.  
போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேஷ் கண்ணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளை போன நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களின் மொத்த  மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.
இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story