மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடு நீக்கம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடு நீக்கம்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல 2 தவணை தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்த புதிய கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. வழக்கம்போல் பக்தர்கள் தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல 2 தவணை தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்த புதிய கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. வழக்கம்போல் பக்தர்கள் தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிநகரங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களையும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க கோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், 13-ந்தேதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள்(டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோவிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் நகல், கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல்கள் வைத்திருப்பது, வாட்ஸ்-அப் செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் போன்ற ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது.
எதிர்ப்பு
இதற்கு கோவில் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், கோவில் நிர்வாகத்தின் இந்த புதிய கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் ஏராளமான பக்தர்கள் பாதிக்கப்படுவதால் அந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தனர். இதுபோல், புதிய அறிவிப்பின் மூலம் வெளியூர்களில், வெளிநகரங்களில் இருந்து வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து, புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அதாவது கோவிலுக்குள் செல்ல தடுப்பூசிகள் 2 தவணை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே 13-12-21 தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என வெளியிடப்பட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுகிறது.
மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Next Story