கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர், பெண் வெட்டிக் கொலை
பெங்களூரு அருகே வீடு புகுந்து கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர், பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
வீடு புகுந்து இரட்டை கொலை
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேகடதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர், கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். சந்தாபுரா அருகே வசித்து வந்தவர் காவ்யா. இவர், சந்தாபுராவில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காவ்யா வீட்டுக்கு நாராயணசாமி சென்றிருந்தார். அங்கிருந்து 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் மர்மநபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்தார்கள். பின்னர் அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நாராயணசாமி, காவ்யாவை சரமாரியாக வெட்டினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த 2 பேரும் வீட்டுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.
கணவர் மீது சந்தேகம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் சூர்யாநகர் போலீசார் விரைந்து வந்து நாராயணசாமி, காவ்யாவின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா, துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லேஷ் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் 2 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
ஆனால் நாராயணசாமி, காவ்யாவை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் நாராயணசாமிக்கும், காவ்யாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லேஷ் தெரிவித்துள்ளார். அவர்கள் 2 பேரையும், காவ்யாவின் கணவரான முத்துராஜ் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2 தனிப்படைகள் அமைப்பு
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், நாராயணசாமி, காவ்யாவை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் பற்றிய முக்கிய துப்பும் கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், என்றார்.
இதுகுறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கொலை நடந்த காவ்யா வீட்டு முன்பு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு உண்டானது.
Related Tags :
Next Story