கொரோனா ஊரடங்கின் போது ஆன்லைன் வகுப்பில் 30 சதவீத குழந்தைகளே முழுமையாக பங்கேற்றனர் - ஆய்வில் தகவல்
கொரோனா ஊரடங்கின் போது ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளில் 30 சதவீத குழந்தைகளே முழுமையாக பங்கேற்றது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
30 சதவீத குழந்தைகளே....
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனாலும் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் தங்களிடம் படிக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தின. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் கல்வி பயின்றது குறித்து கர்நாடக குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆய்வு நடத்தின.
இந்த ஆய்வின் முடிவில் ஆன்லைனில் நடத்தப்பட்ட வகுப்பில் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே முறையாக அதாவது முழுமையாக வகுப்பில் பங்கேற்று கல்வி கற்றது தெரியவந்து உள்ளது. மீதம் உள்ள 70 சதவீத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பின் போது பெற்றோருக்கு உதவி செய்வது, டி.வி.பார்ப்பது, செல்போனில் விளையாடுவது, நண்பர்களுடன் விளையாடுவது என்று பொழுதை கழித்தது தெரியவந்து உள்ளது.
43 சதவீத குழந்தை திருமணம்
ஆனாலும் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு 85 சதவீத மதிய உணவு கிடைத்தது என்றும், 15 சதவீத மாணவர்களுக்கு தான் கிடைக்கவில்லை என்றும் தெரியவந்து உள்ளது. அதுபோல அங்கன்வாடி மையங்களில் இருந்தும் அங்கு படிக்கும் மாணவர்களின் வீட்டிற்கு உணவு சரியான முறையில் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த ஆய்வு அறிக்கையின் மூலம் கொரோனா ஊரடங்கின் போது 48 சதவீத மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியதாகவும், 43 சதவீதம் குழந்தை திருமணம் நடந்து இருப்பதாகவும், 79 சதவீதத்தினர் அவசர சேவை பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் தெரிந்து உள்ளது. பெங்களூருவில் உள்ள 20 குடிசை பகுதிகளில் வசித்து வரும் மாணவர்களில் 43 சதவீதம் பேர் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பள்ளிக்கு செல்லாமல், வேலைக்கு சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story