சிறுமியை 4-வது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது


சிறுமியை 4-வது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2021 1:32 AM IST (Updated: 13 Dec 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

அரசு பஸ் கண்டக்டர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 41). இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் பணிமனை கிளையில் திருச்சி- சிதம்பரம் செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பெரியகருக்கை, பூதம்பூர், கானூர் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களுடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. குழந்தை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ராதாகிருஷ்ணனை பிரிந்து அவரது மனைவிகள் தனியாக வசித்து வருகின்றனர்.
மேலும் ராதாகிருஷ்ணனின் தம்பி, சொத்துக்களை பிரித்து தர கூறியதாகவும், தனது வாரிசுக்குத்தான் சொத்து தருவேன் என்று கூறி ராதாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சிறுமியுடன் திருமணம்
இந்நிலையில் அவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பஸ்சில் வரும்போது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அந்த பெண், பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகளை தன்னுடன் அழைத்து வந்து ஒரு கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணன் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவருக்கு, தனது மகளை திருமணம் செய்ய அந்த பெண் சம்மதித்துள்ளார். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதியன்று ஒரு கோவிலில் ராதாகிருஷ்ணனின் தாய் ருக்குமணி, சிறுமியின் தாய் சேர்ந்து சிறுமிக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
போக்சோவில் கைது
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிந்து  போக்சோ சட்டத்தின் கீழ் ராதாகிருஷ்ணனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் கைது செய்து, அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரித்து, 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் ராதாகிருஷ்ணனும், திருச்சி மகளிர் சிறையில் சிறுமியின் தாயும் அடைக்கப்பட்டனர். உறவினர் வீட்டில் உள்ள சிறுமியை இன்று(திங்கட்கிழமை) அரியலூர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story