திருச்சியில் வாலிபர் வெட்டிக்கொலை
திருச்சியில் பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்
திருச்சி திருவெறும்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் குழந்தை. இவருடைய மகன் பெலிக்ஸ் (வயது 25). இவர் அந்த பகுதியில் சரக்கு ஆட்டோவில் நேற்று மாலை சென்று கொண்டு இருந்தபோது, அவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவரது முகம் சிதைக்கப்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
முதல் கட்ட விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சின்ராசு (24) என்பவர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்னேரிபுரத்தை சேர்ந்த அலெக்ஸ், மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த சரத் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
பழிக்குப்பழி சம்பவம்
தற்போது கொலை செய்யப்பட்ட பெலிக்ஸ் என்பவர் சின்ராசு கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் அலெக்சின் தம்பி ஆவார். ஆகையால் சின்ராசு கொலைக்கு பழிக்குப்பழி சம்பவமாக பெலிக்ஸ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
விரைவில் என ஒட்டப்பட்ட சுவரொட்டி
சின்ராசு கொலை செய்யப்பட்டபோது, அவரது இறுதி சடங்கின்போது, பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சின்ராசுவின் நண்பர்கள் சார்பில் கண்ணீர்அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அதன் கடைசியில் விரைவில் என்ற வார்த்தை இடம் பெற்று இருந்தது. அதனால் பழிக்குபழி சம்பவம் நடைபெறக்கூடுமோ? என்ற அச்சம் நிலவி வந்தது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது தொடர்பாக ஏற்கனவே பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story