ஓமலூர் அருகே காமலாபுரத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு-பதற்றம்
ஓமலூர் அருகே காமலாபுரத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே காமலாபுரத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிலை உடைப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தின்னப்பட்டி செல்லும் சாலையோரத்தில் அம்பேத்கர் மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையின் கை பகுதியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே நேற்று காலை இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம், காமலாபுரம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
சாலை மறியல்
தொடர்ந்து அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இதனை கண்டித்தும் அவர்கள் காமலாபுரம்- தின்னப்பட்டி ரோட்டில் காமலாபுரம் காலனி அருகேயும், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் பிரிவு ரோடு அருகேயும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், ஓமலூர் துணை சூப்பிரண்டு சங்கீதா, தாசில்தார் வல்லமுனியப்பன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வசந்த், இளைஞர் பாசறை அமைப்பாளர் சாமுராய் குரு, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் காந்தி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பதற்றம்-போலீஸ் குவிப்பு
இதையடுத்து சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உறுதி அளித்தனர். இதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வழிவிட்டனர். இதன்படி காமலாபுரம் காலனி அருகே நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரையும், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலைந்து செல்லாமல் சேதப்படுத்தப்பட்ட சிலை உள்ள காமலாபுரம் காலனி பகுதியிலேயே நின்றிருந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
150 பேர் மீது வழக்கு
தொடர்ந்து சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை வருவாய்த்துறையினர் நேற்று மாலை சீரமைத்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. மேலும் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பேத்கர் சிலையை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓமலூர், காமலாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story