வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை


வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2021 7:46 PM IST (Updated: 13 Dec 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்

தூத்துக்குடி:
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் கட்சியினர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி துறைமுக பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோன்களில் வடமாநில தொழிலாளர்களை தனியார் நிறுவனம் மூலம் துறைமுக நிர்வாகம் வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் முத்தையாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. ஆகையால் அரசு அறிவித்தபடி உள்ளூர் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க துறைமுக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறி உள்ளார்.
நிவாரணம்
தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர்  கொடுத்த மனுவில், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு இந்த ஆண்டு குடிநீர் கட்டணம், இந்த மாத மின்சார கட்டணம், வீட்டு தீர்வை, விவசாயிகளுக்கு காட்டு தீர்வை, புஞ்சை தரிசு நஞ்சை தீர்வை போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரமும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
பட்டா வழங்க...
ஏரல் சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் 3 தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். தாமிரபரணி நதிக்கரையில் இருந்து 120 மீட்டர் தொலைவில் பட்டா இடத்துக்கு அடுத்து உள்ளது. இந்த நிலையில் அரசு நிலத்தில் வீடு கட்டி இருப்பதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என்கிறார்கள். எங்கள் தெருவில் ஒரு பகுதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது அதே போன்று எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, சுனாமி குடியிருப்பு, கணபதி நகர், ராம்தாஸ் நகர், கீதாஜீவன் நகர், 202 சுனாமி குடியிருப்பு மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி கடற்கரையோர மக்களுக்கு கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 202 சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த ஆவணங்கள் கிராம கணக்கிலும், தாலுகா அலுவலக கணக்கிலும் பதிவு செய்யப்படவில்லை. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகும் போது, சுனாமி குடியிருப்பு கணக்குகள் பஞ்சாயத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சுனாமி குடியிருப்பு கணக்குகளை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்த பகுதி மக்கள் கனிமொழி எம்.பி வீட்டுக்கும் சென்று மனு கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story