மலைக்கு நடுவே அமைந்த தண்டவாளத்தில் ரெயிலை நிறுத்தி பொதுமேலாளர் ஆய்வு
கொடைரோடு அருகே மலைக்கு நடுவே அமைந்த தண்டவாளத்தில் ரெயிலிலை நிறுத்தி தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
பொதுமேலாளர் ஆய்வு
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் மதுரை, திருச்சி ஆகிய ரெயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் நேற்று ஆய்வு செய்தார். இதையொட்டி மதுரையில் ஆய்வு பணியை தொடங்கிய அவர், சிறப்பு ரெயிலில் புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது வழியில் பாண்டியராஜபுரம், செட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ரெயில்வேகேட்டில் ரெயிலை விட்டு இறங்கி ஆய்வு செய்தார்.
அதேபோல் கொடைரோடு அருகே மலைக்கு நடுவே 3 கி.மீ. தூரம் தண்டவாளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கும் அவர் ரெயிலை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துவிடாமல் தடுக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.
திண்டுக்கல் ரெயில் நிலையம்
அங்கு புதிய தொழில்நுட்ப சேவையை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசுரம், ரெயில்வே அதிகாரிகளுக்கான கையேடு ஆகியவற்றை வெளியிட்டார். இதை தொடர்ந்து ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகள், ரெயில்வே மருத்துவமனை, திருமண மண்டபம், அதிகாரிகள் தங்கும் விடுதி, பயணிகள் ஓய்வறை உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ரெயில்வே ஊழியர்களின் குடியிருப்புக்கு சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு வசிப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு ஊழியரின் மனைவி, சிலர் தங்களை தாக்க முயன்றதோடு மிரட்டியதாக புகார் அளித்தார். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு பொதுமேலாளர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே பொதுமேலாளரிடம், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து அவர் சிறப்பு ரெயில் மூலம் திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வடமதுரை, அய்யலூர் பகுதிகளிலும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த், திண்டுக்கல் மேலாளர் கோவிந்தராஜ் உள்பட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story