மும்பை மதுபான விடுதியில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 அழகிகள்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 13 Dec 2021 10:13 PM IST (Updated: 13 Dec 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

மும்பை மதுபான விடுதியில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 நடன அழகிகளை போலீசார் அதிரடி சோதனை நடத்தி மீட்டனர்.

மும்பை, 
மும்பை மதுபான விடுதியில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 நடன அழகிகளை போலீசார் அதிரடி சோதனை நடத்தி மீட்டனர்.
 கடும் கட்டுப்பாடுகள்
மராட்டியத்தில் ‘டான்ஸ் பார்கள்’ என கூறப்படும் அழகிகள் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இங்கு ஆபாச செயல்கள் நடைபெறுவதால், இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. 
 இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநிலத்தில் மீண்டும் டான்ஸ் பார்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் அரசின் கட்டுபாடுகளை பின்பற்றாமல் பல இடங்களில் டான்ஸ் பார்கள் செயல்பட்டு வருகின்றன. 
அதிரடி சோதனை 
இதில் அந்தேரி பகுதியில் உள்ள தீபா என்ற மதுபான விடுதியில் கட்டுப்பாடுகளை மீறி அழகிகள் நடனம் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அந்த பாரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பாரில் போலீசார் சந்தேகப்பட்டது போல அழகிகள் யாரும் இல்லை.
 நடன அழகிகள் குறித்து போலீசார் அங்குள்ள ஊழியர்களிடம் பல மணி நேரம் துருவி, துருவி விசாரித்தனர். அவர்களும் பாரில் நடன அழகிகள் கிடையாது என விடாப்பிடியாக கூறிவிட்டனர். 
நடன அழகிகள் மீட்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சமூக குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அங்கு சென்றார். மதுபான விடுதியில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாரில் ஒரு அறையில் சந்தேகத்துக்கு இடமாக முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது கண்ணாடிக்கு பின்புறம் சிறிய கதவு இருந்தது. 
மேலும் அந்த கதவை திறந்த போது உள்ளே குறுகிய பாதாள அறை இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாதாள அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் நடன அழகிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் வெளியேற்றினர். அப்போது கோழி கூண்டில் இருந்து வெளியேறுவது போல ஒவ்வொருவராக தட்டுத்தடுமாறி வெளியே வந்தனர். இவ்வாறு பாதாள அறையில் இருந்து 17 அழகிகளை மீட்டனர். 
வழக்குப்பதிவு 
மேலும் அழகிகள் நீண்ட நேரம் அறைக்குள்ளேயே இருப்பதற்காக குளிர்சாதன வசதி மற்றும் தேவையான குடிநீர், குளிர்பானம், உணவு வகைகளும் உள்ளே இருந்து உள்ளது. போலீஸ் சோதனையில் சிக்காமல் இருக்க இவ்வாறு பாதாள அறை அமைத்து அழகிகளை அடைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் மேலாளர், காசாளர் மற்றும் 3 ஊழியர்களை கைது செய்தனர். மேலும் பாருக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

Next Story