விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடையில் ரஸ்க் பாக்கெட் வாங்கியதற்கு பணம் கேட்ட பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது


விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடையில் ரஸ்க் பாக்கெட் வாங்கியதற்கு பணம் கேட்ட பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது
x
தினத்தந்தி 13 Dec 2021 10:19 PM IST (Updated: 13 Dec 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ரஸ்க் பாக்கெட் வாங்கியதற்கு பணம் கேட்ட பெண் ஊழியர்களை சிலர் தாக்கிய சம்பவம் வீடியோ காட்சியாக சமூகவலைதளங்களில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் ராமச்சந்திரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 50). இவர் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் டீ மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அந்த கடையில் பெண் ஊழியர்கள் 2 பேர் பணியில் இருந்துள்ளனர்.

அப்போது அந்த கடைக்கு வந்த விழுப்புரம் வழுதரெட்டி காலனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களிடம் ரஸ்க் பாக்கெட்டை தரும்படி கேட்டுள்ளார். அதன்படி அவர்களும், அந்த பெண்ணிடம் ரஸ்க் பாக்கெட் கொடுத்தனர். 

அதனை பெற்ற அந்த பெண், ரஸ்க் பாக்கெட்டிற்கு உரிய பணம் தராமல் செல்ல முயன்றுள்ளார். உடனே கடை ஊழியர்கள் இருவரும், அந்த பெண்ணிடம் பணம் தரும்படி கேட்டனர். அதற்கு அவர் பணம் தர முடியாது என்று கூறியதோடு, என்னிடம் பணம் கேட்டால் இங்கு கடையே நடத்த முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பெண் ஊழியர்கள் மீது தாக்குதல்

மேலும் அப்பெண், தனது உறவினர்களை அழைத்து வந்து கடையில் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர், அந்த கடையில் இருந்த பெண் ஊழியர்களை தாக்கினர். கடையில் ரஸ்க் வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஊழியர்களை தாக்கிய சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. 

அந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் தனசேகரன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த ராஜபாண்டியன் உள்ளிட்ட 15 பேர் மீதும், அதேபோல் வழுதரெட்டியை சேர்ந்த பாஞ்சாலி அளித்த புகாரின்பேரில் கடையில் வேலை செய்யும் 2 பெண் ஊழியர்கள் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story