ஓசூரை சேர்ந்த 11 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10½ கோடி கடன் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்
ஓசூரை சேர்ந்த 11 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10½ கோடி தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
கடன் வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக 11 தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரூ.10 கோடியே 58 லட்சம் மதிப்பில் தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தொழில் திட்டங்களை புரட்சிகரமாக செயல்படுத்தும் விதமாக, 2021-2022-ம் நிதியாண்டில், ரூ.2,500 கோடி கடனுதவிகள் வழங்க ஆணையிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் ஓசூர் கிளைக்கு ரூ.200 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில், ரூ.110 கோடி தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது 11 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 கோடியே 58 லட்சம் மதிப்பில் தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உபகரணங்கள்
மத்திய அரசு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் மையங்களில் ஓசூரும் ஒரு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் பாதுகாப்பு உபகரண பொருட்களை தயாரிக்க முன்வந்து முன்னோடி நிறுவனங்களாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முதுநிலை மேலாளர் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story