தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற 47 கோவில்களுக்கு மருத்துவமனை, ரோப்கார் வசதி. அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற 47 கோவில்களில் மருத்துவமனை, ரோப்கார் உள்ளிட்ட வசதிகள் செய்ய வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சோளிங்கர்
தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற 47 கோவில்களில் மருத்துவமனை, ரோப்கார் உள்ளிட்ட வசதிகள் செய்ய வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
ரூ.11 கோடியில் திட்டங்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் பெரியமலை அடிவாரத்தில் ரோப்கார் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் ரோப் கார் அமையும் இடத்தில் பொதுமக்கள் தங்குமிடம், உணவகம் குடிநீர், பூங்கா உள்ளிட்ட அடிப்படைவசதிகள் செய்ய ரூ.11 கோடியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். ஜெகத்ரட்சகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
அவர் பேசியதாவது:-
மருத்துவமனை, ரோப் கார்
தமிழகத்தில் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 மாதத்தில் ரூ.1,600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. பிரசித்தி பெற்ற 47 கோவில்களுக்கு வரைவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அந்தந்த கோவில்களுக்கு பஸ் வசதிகள், கழிவறை வசதிள், மலைப்பாதையில் உள்ள கோவில்களுக்கு மருத்துவமனைகள், மடப்பள்ளி, ரோப் கார் வசதி, தானியங்கி வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 5 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொழி, இன, ஜாதி, மதங்களை கடந்து இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. பழனி கோவிலுக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே ரூ.300 கோடி மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோளிங்கரில் யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ஆர்.காந்தி
கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில் பொறுப்பேற்று 6 மாதங்களே ஆன நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தி உலக அளவில் பாராட்டு பெற்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின். மழை வெள்ள பாதிப்புகளை தமிழகம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறார். சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் ரோப்கார் பணிகள் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பெருந்திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.
6 மாதத்திற்குள்...
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவிலில் வருகிற 6 மாத காலத்திற்குள் ரோப்கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்து அறநிலையத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு 240 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இக் கல்லூரியில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் பெங்களூரு தொழில் அதிபர் பூபாலன், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், கோவில் செயல் அலுவலர் ஜெயா, கோவில் கண்காணிப்பாளர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story