பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருப்பு போராட்டம் நாமக்கல்லில் நடந்தது


பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருப்பு போராட்டம் நாமக்கல்லில் நடந்தது
x
தினத்தந்தி 13 Dec 2021 10:53 PM IST (Updated: 13 Dec 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருப்பு போராட்டம் நாமக்கல்லில் நடந்தது

நாமக்கல்:
பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மதிவாணன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டியும் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
தனிக்குழு நியமனம்
இந்த போராட்டம் குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ராமு நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் தொடுக்கப்படும் அனைத்து விதமான புகார்களையும், பள்ளிக்கல்வி துறை அதற்கென தனிக்குழுவை நியமித்து உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
அதை தவிர்த்து, ஆசிரியர் மீது புகார் கொடுத்தவுடன் எந்த விசாரணையும் செய்யாமல் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டு, மறுநாள் அவர் மீது பள்ளியில் விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. வரும் காலங்களில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எந்த புகார் கொடுத்தாலும் அவற்றை விசாரிப்பதற்கு அரசு உடனடியாக தனிக்குழுவை நியமித்து, அரசாணை வெளியிட வேண்டும்.
பணி பாதுகாப்பு சட்டம்
மேலும் பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் வெளிநபர்களால் தாக்கப்படுவது, மாணவர்கள் ஆசிரியைகளை தாக்குவது இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வருவது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே முதல்-அமைச்சர் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி, நாங்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேற்கொண்டு உள்ள இந்த காத்திருப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற, மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மலர்கண்ணன், பாலகிருஷ்ணன், அத்தியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story