கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தொடங்கியது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 13 Dec 2021 11:11 PM IST (Updated: 13 Dec 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு அளித்தனர்.

கரூர்
உட்கட்சி தேர்தல்
அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கரூர், நெல்லை, ஈரோடு புறநகர் கிழக்கு, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் நேற்றும், இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் கரூருக்கு தேர்தல் நடத்தும் பொறுப்பாளராக அமைப்பு செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.          இந்நிலையில் கரூரில் நேற்று அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக அமைப்புகளுக்கான தேர்தல் தொடங்கியது. இதற்கு அமைப்பு செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.வும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளருமான சுப்புரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விருப்ப மனு
தேர்தல் நடத்தும் பொறுப்பாளர் நத்தம் விஸ்வநாதன் அ.தி.மு.க.வினருக்கு கட்சி தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். 
கரூர் மாவட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 17 இடங்களிலும், பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 11 இடங்களிலும், நகரக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 4 இடங்களிலும் விருப்ப மனு பெறப்பட்டது. 
அ.தி.மு.க.வினர் குவிந்தனர்
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான சின்னசாமி ஆகியோர் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் தேர்தல் நடக்கும் பணிகளை பார்வையிட்டனர். 
மேலும் அ.தி.மு.க.வினர் உற்சாகத்துடன் காலை முதலே அ.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பாக குவிந்தனர். பின்னர் உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய கழக, பேரூர் கழக, நகர கழக நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு அளித்தனர்.

Next Story